கார்த்திகை திங்கள். அதாவது கார்த்திகை சோமவாரம். சிவவழிபாட்டுக்கு மிக உகந்த திருநாள். ஏன் தெரியுமா?
சிவபெருமானைக் குறித்து நோற்கப்படும் விரதங்களுள் சோமவார விரதம் முக்கியமானது. சந்திரனுக்குரிய நாளான திங்கள்கிழமையில் இது கடைப்பிடிக்கப்படு கிறது. க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி சபிக்கப் பட்ட சந்திரன், இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, விமோசனம்பெற்று சிறப்பு பெற்றான். அவனுக்குச் சிவபெருமான் அருள்புரிந்ததுடன், அவனை தனது முடிமேல் சூடிக்கொண்டு ‘சந்திரசேகரர்’ என்ற பெயரையும் ஏற்றார்.
சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கி யத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
சோமவார விரதம் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்துச் சோமவாரங்கள் (திங்கள் கிழமைகள்) தனிச் சிறப்பு பெறுகின்றன.
இந்த நாட்களில் சிவாலயங்களில் ‘சங்காபிஷேகம்’ நடைபெறும். சந்திரசேகரர் பவனி விழா நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலை களில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமா னுக்குத் திருமுழுக்காட்டுகின்றனர்.
கார்த்திகை சோமவார தினங்களில் இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், சிவாலயங்களில் அருளும் சந்திரசேகர மூர்த்திக்கு வெண்மலர்கள் சூட்டி, வெண்பட்டு அணிவித்து வழிபட்டால், ஆயுள் விருத்தி அடைவதுடன் மன அமைதி கிட்டும், வம்சம் தழைக்கும்.
மேலும் கார்த்திகை சோமாவார திருநாட்களில் சிவத்தலங்களைத் தரிசிப்பதும் கோடிபுண்ணியத்தைப் பெற்றுத் தரும். குறிப்பாக இறைவன் சிவனார், சந்திரனின் பெயரை ஏற்று அருள்பாலிக்கும் தலங்களைத் தரிசிப்பது விசேஷம்.
கார்த்திகைத் திங்களை சிறப்பிக்கும் வகையில், சோமசுந்தரர் எனும் திருப்பெயரோடு சொக்கேச பெருமான் அருளும் மதுரை சிவாலயச் சிறப்புகளை அறிவோமா?
சிவ தலங்களுள் 16 மிக முக்கியமானவை. அவற்றுள் சிதம்பரம், காசி, திருக்காளத்தி, மற்றும் திருவாலவாய் ஆகிய 4 தலங்கள் குறிப்பிடத்தக்கவை. ‘திருவாலவாய்’ மதுரைமாநகரின் பெயர்களுள் ஒன்று. இந்தப் பெயர், கேட்ட மாத்திரத்திலேயே இறவாப் பேரின்ப நிலை கிடைக்கும். வாழும் காலத்திலேயே வீடு பேறு- சிவன் முக்தி தரும் தலம் என்பதால், ‘சிவன் முக்திபுரம்’ எனும் பெயரும் இதற்கு உண்டு. மேலும் சிவராஜ தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் எனப் பல பெயர்களைக் கொண்டது மதுரை.
‘மதுரையே மீனாட்சி; மீனாட்சியே மதுரை’ என்று கூறும் அளவுக்கு சக்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த திருக்கோயில், சக்தி பீடங்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. இந்த பீடத்துக்கு ‘ராஜமாதங்கி சியாமள பீடம்’ என்று பெயர்.
இங்குள்ள மீனாட்சி அம்மனது விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள 366 கோயில்களில் முதன்மையானது இது.தவிர, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பல்வேறு சிறப்புகள் பொதிந்து உள்ளன.
மீன் போன்ற கண்கள் கொண்டவள் என்பதால் மீனாட்சி என்ற பெயர் ஏற்பட்டது. மீன் தனது முட்டைகளை, பார்வையாலேயே தன்மயமாக்குவது போல், பக்தர்களை அருட்கண்ணால் நோக்கி அன்னை மீனாட்சியும் அருள்பாலிக்கிறாள்.
மீனாட்சி அம்மனுக்கு பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள் போன்ற பெயர்களும் உள்ளன.
ராமர், லட்சுமணர், வருணன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் பலரும் பூஜித்துப் பேறு பெற்ற தலம் மதுரை.
விருத்ராசுரனைக் கொன்ற இந்திரன், பிரும்மஹத்தி தோஷம் நீங்க பாண்டிய நாட்டுக் கடம்ப வனத்தில் சுயம்பு லிங்கத்தை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றான். இந்த சிவலிங்கத்தைத் தேவர்களும் பூஜித்து வந்தார்கள். ஒரு நாள் தனஞ்செயன் என்ற வியாபாரி கடம்பவனத்தில் கானம் ஒன்றைக் கேட்டு அருகில் சென்றபோது லிங்கம் அவன் கண்களுக்குத் தென்பட்டது. அப்போது மணவூரை ஆண்ட குலசேகர பாண்டிய மன்னரிடம், இந்தத் தகவலைக் கூறினான். அரசன் கடம்ப வனத்துக்கு வந்து ஈசனை தரிசித்தான். பின்பு அங்கு கோயில் கட்டி, நகரத்தையும் உருவாக்கி, மக்களுடன் குடியேறினான்.
மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் கருவறை விமானங்கள் தேவேந்திரனால் அமைக்கப்பட்டவை. 32 சிங்கங்களும், 64 சிவ கணங்களும் 8 கல் யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமான கருவறை. மீனாட்சி அம்மனை திருமணம் புரிவதற்காக, சுடலை ஆண்டியான ஈசன், மணக்கோலத்தில் வந்தமையால் சுந்தரேஸ்வரர் என்றும், சொக்கன் என்றும் அழைக்கப்படுகிறார்.
மீனாட்சி அம்மன் அரசியாக இருந்ததால், அபிஷேகங்களை பக்தர்கள் பார்க்க அனுமதி இல்லை. அலங்காரம் செய்த பிறகே பார்க்கலாம். மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் தலவிருட் சங்கள்; கடம்பம், வில்வம்.
பொற்றாமரைக் குளம், வைகை நதி ஆகிய தீர்த்தங்கள் இந்தத் தலத்துக்கு சிறப்பு சேர்க்கின்றன. எழு கடல், கொண்டாழி, கிருத மாலை, தெப்பக்குளம் புறத்தொட்டி நின்மாலிய தீர்த்தம் ஆகியன மறைந்துவிட்டன. பொற்றாமரைக் குளம் சிவபெருமானால் ஆதியில் படைக்கப்பட்டது. எனவே, இது ஆதி தீர்த்தம் எனப்படுகிறது.
மற்ற இடங்களில் இடப்பாதம் தூக்கி ஆடும் நடராஜ மூர்த்தி, மதுரை- வெள்ளியம்பலத்தில் தன் வலப்பாதத்தைத் தூக்கி நடனமாடுகிறார். பாண்டிய மன்னன் ராஜசேகரனுக்காக இறைவன் இப்படிக் காட்சியளித்ததாக ஐதீகம்.
வெள்ளியம்பல நடராஜர் சந்நிதி, சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் செலவில் 1,790 சதுர அடி பரப்பளவில் 1,354 கிலோ வெள்ளித் தகடுகள் பொருத்தப்பட்டு மின்னுகிறது.
சுந்தரேஸ்வரர் புதன் கிரக அதிபதி. இவருக்கு புதன்கிழமை தேன் அபிஷேகம் செய்தால், குரல் வளம் பெருகும் என்பது ஐதீகம்.சுவாமி சந்நிதிக்கு எதிரில் வேலைப்பாடு நிரம்பிய அகோர வீரபத்திரர் மற்றும் பிரமாண்டமான பத்ரகாளி சிற்பங்கள் உள்ளன. மேலும் அக்கினி வீரபத்திரர், ஊர்த்வ தாண்டவர் சிற்பங்களும் உள்ளன.
மாணிக்கவாசகர் பிறந்த ஊர் மதுரை அருகேயுள்ள திருவாதவூர். குதிரை வாங்கக் கொடுத்த பணத்தை கோயில் திருப்பணிக்குச் செலவு செய்ததால் மாணிக்கவாசகரை சிறையிலிட உத்தரவிட்டான் அரிமர்த்தன பாண்டியன். மாணிக்கவாசகர் சோமசுந்தரக் கடவுளிடம் முறையிட, நரிகளைப் பரிகளாக்கி திருவிளையாடல் புரிந்தார் இறைவனார். இதை நினைவூட்டும் ஐதீக விழா, ஆவணி மாதத்தில் இங்கு விமரிசையாக நடைபெறுகிறது.
மூர்த்தி நாயனார், சந்தனக் கட்டை கிடைக்காததால் அதற்கு பதிலாக தன் முழங்கையை சந்தனம் தேய்க்கும் கல்லில் வைத்துத் தேய்க்கத் தொடங்கினார். இறைவன் அவரை தடுத்து, அரசனாக்கி அருள் புரிந்தார். மூர்த்தி நாயனார் கையைத் தேய்த்த அந்தக் கல், மீனாட்சியம்மன் சந்நிதியில் இன்றும் இருக்கிறது.
சிவபக்தர் பாணபத்திரரது வறுமையைத் தீர்க்க, சோமசுந்தரர், கடிதம் ஒன்றை தந்து, அதை சேரமான் பெருமாள் நாயனாரிடம் சேர்ப்பிக்கச் சொன்னார். அதனால் சேரமான், தனது செல்வம் மொத்தத்தையும் பாணபத்திரருக்கு சமர்ப்பித்தார். பாணபத்திரர் கொஞ்சத்தை எடுத்துக் கொண்டு, சேரமானிடமே மீதியைத் தந்து விட்டார்.
இப்படி இறைவன் சோமசுந்தரர் நிகழ்த்திய ஆச்சர்யங்களும் அற்புதங்களும் ஏராளம். எனவே, சோமவாரத்தில் (திங்கள்கிழமையில்) அருகில் இருக்கும் சிவத்தலங்களில், சிவனாரையும் உமையாளையும் வணங்கி, சோமவார பேற்றைப்பெறுவோம்.