கேதார்நாத் ஸ்ரீகேதாரீஸ்வரர் தரிசனம்.
உமையம்மை விரதமிருந்து சிவப்பரம்பொருளின் இடபாகம் பெற்ற ஜோதிர்லிங்கத் தலம் .
அஷ்டமகாவிரதங்கள், சிவபெருமானைப் போற்றும் விரதங்கள்.
கார்த்திகை சோமவார விரதம், கார்த்திகை உமா மகேஸ்வர விரதம், மார்கழி திருவாதிரை விரதம், தை மாத சூல விரதம், மாசிமாத மகா சிவராத்திரி விரதம், பங்குனி உத்திரத் திருக்கல்யாண விரதம், வைகாசிமாத அஷ்டமி ரிஷப விரதம் மற்றும் ஐப்பசி மாத கேதார கௌரி விரதம் ஆகிய எட்டு விரதங்களுமே மகா விரதங்கள் என்று போற்றப்படுவன. இவற்றுள், கேதாரகௌரிவிரதம் மிகவும் முக்கியமானது.
ஒருமுறை, சிவபெருமானும் பார்வதிதேவியும் கயிலாயத்தில் இருந்தபோது, பிருங்கி முனிவர் தரிசனம் செய்ய வந்தார். அப்போது பிருங்கி, சிவபெருமானை மாத்திரம் வலம்வந்து நமஸ்கரித்தார்.
மகரிஷி, சக்தியாகிய தன்னைவிடுத்து சிவத்தை மட்டும் நமஸ்கரிப்பது ஏன்? என்று பார்வதி தேவி சிவபெருமானிடம் கேட்டார். அன்னையின் கேள்வியின் பொருள் அறிந்த அப்பனும், இந்த உலகிற்கு ‘சிவன் இல்லையேல் சக்தி இல்லை’ எனவும் ‘சக்தியில்லையேல் சிவம் இல்லை’ என்பதை உணர்த்தவும் திருவுளம் கொண்டார். ஈசன் மனத்தில் நினைத்ததை உள்ளூர உணர்ந்த அன்னை, கயிலாயத்திலிருந்து நீங்கினார். ‘கேதாரம்’ என்னும் மலைச் சாரலுக்குச் சென்று அங்கு தங்கி, ஈசனை லிங்க வடிவமாய்ப் பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தார் பார்வதிதேவி.
புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தன் பூஜையைத் தொடங்கி, தொடர்ந்து 21 நாள்கள் கடுமையான விரதம் மேற்கொண்டார் அன்னை. அன்னையின் தவம் கண்டு மனம் கனிந்த ஈசன், உமையின் முன் தோன்றினார்.
“சர்வ ஜகன்மாதாவான நீ வேண்டுவது என்ன?” என்று கேட்டார். அப்போது அன்னை ஈசனை வணங்கி, “இந்த உலகில் ஆண்களும் பெண்களும் சமம் என்பதை உணர்த்த, உலகின் முதலோனான தாங்கள், தங்களில் பாதியை எனக்குத் தரவேண்டும்” என்று வேண்டிக்கொண்டாள். ஈசனும் அன்னையின் வேண்டுகோளுக்கிணங்கி, தன் இடப்பாகத்தை அம்மைக்கு வழங்கி அர்த்தநாரீஸ்வரராகக் காட்சிகொடுத்தார்.
மனம் மகிழ்ந்த அன்னை, ‘தான் மேற்கொண்ட விரதமே தனக்கு இந்த வரத்தை வழங்கியது’ என்பதை உணர்ந்து, ‘இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்’ என்றும் ‘அவ்வாறு மேற்கொள்ளும் சுமங்கலிப் பெண்களுக்கு, தீர்க்க சுமங்கலி பாக்கியமும் கணவனை விட்டுப் பிரியாத ஆனந்த வாழ்வும் ஸித்திக்கும்’ என்றும் ஆசீர்வதித்தார்.
அன்று முதல் கேதார கௌரி விரதம் இந்தப் பூவுலகில் முதன்மையான விரதமாகப் போற்றப்பட்டு கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
‘இந்த விரதத்தைத் தொடர்ந்து கடைபிடிப்பவர்கள், அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வார்கள்’ என்றும், ‘பிரிந்திருக்கும் தம்பதியர் இந்த விரதத்தை மேற்கொள்ள, விரைவில் சேர்ந்துவாழும் பாக்கியம் உண்டாகும்’ என்றும் கூறுகிறார்கள்
இவ்வரலாறு நடைபெற்ற தலம் புனிதமிக்க கேதாரம்.
இந்துக்களின் மிக முக்கியமான புனித நகரம் கேதார்நாத். இது வட இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமன் ஜோதிர்லிங்கமாக எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கிறார். இமயமலைத் தொடரில் மிக அழகிய இடத்தில் கேதார்நாத் அமைந்துள்ளது.
உயர்ந்த சிகரங்களும் புனிதமிக்க மந்தாகினி நதியும் நம்மை பரவசத்தில் ஆழ்த்தும்
. கேதர்நாத், கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆதி சங்கராச்சாரியாரால் 8ஆம் நூற்றாண்டில் இக்கோவில் புனரமைக்கப்பட்டது.
சத்திய(திரேதா) யுகத்தில் வாழ்ந்த அரசர் கேதாரின் நினைவாக இந்நகரம் கேதார்நாத் என்ற பெயரை பெற்றது. மேலும், அவரது மகள் விருந்தா, லக்ஷ்மியின் அவதாரம் என்பதால் கேதார்நாத் நிலம் விருந்தவன் என்ற பெயரைப் பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.
மகாபாரதப் போரில் தங்கள் உறவினர்களையே கொன்றதால், அந்த பாவத்தைப் போக்க பஞ்ச பாண்டவர்கள் காசிக்குப் புனித யாத்திரையை மேற்கொண்டனர். ஆனால், சிவப்பரம்பொருள் அங்கிருந்து கயிலாயம் சென்றதால், அவர்கள் தங்களது யாத்திரையைக் கயிலாத்தை நோக்கி மாற்றினர்.
ஹரித்வார் வழியாக இமயத்தை நெருங்கும் போது, அவர்கள் சிவப்பரம்பொருளைப் பார்த்துள்ளனர். ஆனால் சிவபெருமான் அங்கிருந்து மறைந்துவிட்டார்.
தற்போது அந்த இடம் குப்தகாசி என்ற பெயரில் உள்ளது. சிவபெருமான் மறைந்த போதிலும் அவரை பார்த்தே ஆகவேண்டும் என்று பாண்டவர்கள் குப்தகாசியில் இருந்து இமயமலை பள்ளத்தாக்கில் இருக்கும் கௌரிகுண்ட் இடத்தை அடைந்தனர்.
அப்போது அங்கு காட்டெருமையை கண்டனர். அதன் மீது பீமன் தனது காதாயுதத்தை வைத்து தாக்க முயன்றான். அதில் இருந்து காட்டெருமை தப்பித்தது. இருந்தாலும் எருமையின் முகம் தாக்கப்பட்டது. இதனால் பூமியின் ஒரு பிளவில் எருமை மறைந்து கொண்டது. அந்த சமயம் பீமன் அதன் வாலை இழுக்க, நேபாளம் வரை பிளவு ஏற்பட்டது. நேபாளத்தில் அந்த இடம் தோலேஸ்வர் மகாதேவ் என்று அழைக்கப்படுகிறது.
காட்டெருமை இருந்த இடத்தில் ஜோதிர்லிங்கம் உண்டானது. அந்த ஒளியில் இருந்து சிவப்பரம்பொருள் தோன்றி பாண்டவர்களின் பிரமஹத்தி தோஷத்தைப் போக்கினார்.
அம்முக்கோண வடிவ ஜோதிர்லிங்கம் கேதார்நாத்தின் கருவறையில் இருக்கிறது. கோயிலை சுற்று பஞ்ச பாண்டவர்களின் அடையாளங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. காட்டெருமையிடம் பீமன் சண்டையிட்டதன் முடிவில், பீமன் சிவபெருமானுக்கு நெய்யால் அபிஷேகம் செய்ததால், இன்றும் ஜோதிர்லிங்கதுக்கு நெய்யால் அபிஷேகம் நடந்து வருகிறது.
உலக மக்கள் நன்மைக்காக எப்போதும் இங்கிருந்து அருள் புரிய வேண்டும் என்று நர-நாராயணன்கள் சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டதால், சிவபெருமான் ஜோதிர்லிங்க வடிவத்தில் இங்கு திகழ்ந்து வருவதாகவும், அவரை கேதாரேஸ்வரர் என்று போற்றப்படுவதாகவும் புராணம் கூறுகிறது.
கோயில் காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை திறந்திருக்கும்.
கோயிலின் நுழைவாயிலில் பாண்டவர்கள், கிருஷ்ணர், சிவபெருமானின் வாகனமான நந்தி தேவர், காவலாளியான வீரபத்திரர், திரௌபதி போன்றோரது திருமேனிகளைத் தரிசனம் செய்யலாம்.
இக்கோயிலுக்கு அருகில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு திருமணம் நடந்த கோயிலும் இடம் பெற்றுள்ளது. பஞ்ச பாண்டவர்கள் கட்டிய கோவிலும் இங்கு உள்ளதாக கூறப்படுகிறது. ஆதி சங்கரர் இக்கோயிலோடு சேர்த்து பல கோயில்களை உத்தரகாண்டில் புனரமைத்தார். கேதார்நாத்தில் ஆதி சங்கரர் மகாசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த இடம் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.
இந்துக்களின் புனித நதியாக திகழும் கங்கையின் கரையில் அமைந்திருக்கும் முக்கிய நகரங்களும் ஒன்றான ரிஷிகேஷில் இருந்து 223 கிமீ தொலைவில் கேதார்நாத் அமைந்துள்ளது. மந்தாகினி நதி அருகே இருக்கும் கோயில், கடல்மட்டத்தில் இருந்து உயர்ந்து காணப்படும். கோயிலை சுற்றி இமயமலையும், மேய்ச்சல் நிலங்களும் உள்ளன. புனித யாத்திரை மற்றும் மலையேற்றப் பயிற்சிகளுக்கு நம்மை ஈர்க்கக்கூடிய இடமாகவும் இது அமைந்துள்ளது. சாலை வழியில் இக்கோயிலை நேரடியாக அணுக முடியாது. கௌரிகுண்ட் என்ற இடத்தில் இருந்து 14கிமீ தொலைவில் மலை ஏறியே இக்கோயிலை சென்றடைய முடியும்.டோலி,குதிரை மூலமும் செல்லலாம். அதனால் பஸ், கார், வேன் போன்ற வாகனங்கள் கௌரிகுண்ட் வரை மட்டுமே செல்லும்.தற்பொழுது உலங்கு ஊர்தி (Helicopter)வசதியும் உள்ளது.
இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும்.
குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் குப்தகாசியின் உகிமத் மடத்திற்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன.
புகைப்படங்கள்:
தீபாவளியை முன்னிட்டு மலர் அலங்காரத்தில் கேதார்நாத் திருக்கோயில்.( இன்று திருக்கோயில் நடை சாத்தப்படுகிறது;பனிக்காலம் முடிந்து ஏப்ரல் மாதம் மீண்டும் திறக்கப்படும். )
ஸ்ரீகேதாரீஸ்வரரு_தரிசனம்.
தீபாவளியினை முன்னிட்டு வண்ண விளக்கொளியில் திருக்கேதாரம்
பனிக்காலம் துவங்கியது .