fbpx

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 28, 3

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

  1. திருஞானசம்பந்த நாயனார்
    .
    பகுதி 3

மதுரைப் பயணம்:

அக்காலத்தில் பாண்டிநாடு சமண சமய இருளில் மூழ்கியிருந்தது. ஆனைமலை முதலிய மலைகளைத் தம் இருப்பிடங்களாகக் கொண்ட சமண மதத்தவர்கள் தங்கள் சமயத்தைப் பரப்புவதுடன் சைவ சமயத்தை இகழ்ந்தும் பழித்தும் வந்தனர். அக்காலத்தில் அரசு புரிந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்து ஒழுகிய காரணத்தால் மக்களும் அச்சமயம் சார்ந்து ஒழுகத்தலைப்பட்டனர். சிவாலயங்கள் சமண் பாழிகளாகவும் பள்ளிகளாகவும் மாற்றப்பட்டும் வழிபாடு இன்றியும் இருந்தன. மன்னனின் மாதேவியார் மங்கையர்க்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் உறுதியாய்ச் சிவநெறி கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இறையருள் பெற்ற ஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்வியுற்ற அரசியாரும் அமைச்சரும் அவர் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அறிந்து தம் பரிசனங்களை அனுப்பி வணங்கி தம் நாட்டு நிலையைத் தெரிவித்து வருமாறு செய்தனர்.

பாண்டி நாட்டிலிருந்து திருமறைக்காடு வந்த பரிசனங்கள் ஞானசம்பந்தரை வணங்கித் தங்கள் நாட்டின் நிலையை எடுத்துரைத்தனர். உடன் இருந்த அடியவர்கள் ஞானசம்பந்தரிடம் பாண்டி நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனத் தெரிவித்துக் கொண்டார்கள். ஞானசம்பந்தரும் அப்பரும் மறைக்காட்டீசன் திருக்கோயில் சென்று வணங்கினர். ஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் தம் வேட்கையை அப்பரிடம் தெரிவித்தார். அதனை அறிந்த அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிப் பிள்ளாய் அமணர் செய்யும் வஞ்சனைக் கோர் அளவில்லை என்பதை நான் உணர்ந்தவன். மேலும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை. இதுபோது பாண்டிநாடு செல்வது கூடாது? எனத்தடுத்தார். ஞானசம்பந்தர் அப்பரை நோக்கி நாம் போற்றுவது நம் பெருமானுடைய திருவடிகளை. ஆதலால் நம்பால் எத்தகைய தீங்கும் வாராது எனக் கூறியதோடு, நாள் கோள்களின் குற்றங்கள் நீங்க வேயுறு தோளிபங்கன் என்ற கோளறு திருப்பதிகம் பாடி, மதுரைப் பயணத்தை மேற்கொண்டார். தம்மோடு உடன் வரமுற்பட்ட அப்பரடிகளைத் தடுத்து நிறுத்திச் சோழ நாட்டில் இறைவனைத் தொழுது இருப்பீர்களாக எனக் கூறித் தமது மதுரைப் பயணத்தைத் தொடர்ந்தார்.

அமைச்சர் வரவேற்பு:

திருஞானசம்பந்தர் திருமறைக் காட்டிலிருந்து அடியவர் புடைசூழச் சிவிகையில் ஏறிப் புறப்பட்டு அகத்தியான்பள்ளி, கோடிக் குழகர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு தென் மேற்றிசை நோக்கிச் சென்று திருக் கொடுங்குன்றம் பணிந்து மதுரையின் எல்லையை அடைந்தார், மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தர் வருகையை அறிந்து ஊர் எல்லையில் வரவேற்குமாறு குலச்சிறை யாரை அனுப்பியிருந்தார். மதுரை எல்லையை அடைந்த ஞானசம்பந்தரைக் குலச்சிறையார் வணங்கி வரவேற்றார். பிள்ளையார் சிவிகை யிலிருந்து இறங்கி அரசியார்க்கும் அமைச்சர்க்கும் திருவருளால் நன்மைகள் விளைக என வாழ்த்தினார். குலச்சிறையார் இன்று தாங்கள் எழுந்தருளப் பெற்ற பேற்றினால் என்றைக்கும் திருவருள் உடையோம். இனி எங்கள் நாட்டில் திருநீற்றொளி விளங்குவது உறுதி என முகமனுரை கூறி, மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தரை வரவேற்கத் தன்னை அனுப்பியுள்ளதைத் தெரிவித்தார். மேலும் மதுரை மிக அண்மையிலுள்ளது என்றும் கூறினார். ஞானசம்பந்தர் மதுரையை நெருங்கிய நிலையில் மதுரை இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது எனக் கேட்க அடியவர்கள் கோபுரத்துடன் திருக்கோயிலைச் சுட்டிக்காட்டி அதுவே திருவாலவாய் எனக் கூறக்கேட்டு மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் ஆகியோரின் பக்தி நலத்தைப் புகழ்ந்து திருப்பதிகம் அருளிச் செய்து கொண்டே ஆலவாய்த் திருக்கோயிலை அடைந்து குலச்சிறை யாருடன் வலங்கொண்டு பணிந்துநீலமாமிடற்று` எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.

மங்கையர்க்கரசியார் சந்திப்பு:

ஆலவாய் இறைவர் திருக்கோயிலை வழிபட வந்த மங்கையர்க்கரசியார் வழிபாடு முடித்துக் கோயில் முன்றிலில் திருஞான சம்பந்தரைக் கண்டு அவர் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து பணிந்தார். பிள்ளையார் எழுதரிய மலர்க்கரங்களால் அவரை எடுத்தார். யானும் என் நாயகனும் செய்த தவப்பயனால் தங்களைத் தரிசிக்கும் பேறு பெற்றேன் எனக் கூற ஞானசம்பந்தர் புறச் சமயச் சூழலுள்ளும் சிவனடித் தொண்டினை மறவாது போற்றும் உம்மைக் காணும் பொருட்டே இங்குவந்தோம் எனக்கூறி அவருக்கு விடைகொடுத்து அனுப்பித் திருக்கோயில் புறத்தணைந்து குலச்சிறையார் காட்டிய திருமடம் ஒன்றில் அடியவர்களோடு எழுந்தருளியிருந்தார். அரச மாதேவியாரின் கட்டளைப்படி குலச்சிறையார் அடியார்களுக்கு நல்விருந்தளித்து உபசரித்தார்.

திருமடத்திற்குத் தீ வைத்தல்:

பகற்பொழுது கழிந்து இரவு வந்தது. ஞானசம்பந்தரோடு உடன் வந்த அடியவர் அந்தணர் முதலானோர் வருகையை அறிந்த சமணர் கண்டு சினம் கொண்டனர். மன்னனிடம் சென்று முறையிட்டனர். தாங்கள் அறிந்த மந்திரத்தால் ஞானசம்பந்தர் தூங்குகின்ற மடத்திற்குத் தீவைக்க அனுமதி பெற்றனர்.

சமணர் அனலை ஏவிய மந்திரம் ஞானசம்பந்தரின் அடியவர் ஓதும் ஐந்தெழுத்துக்கு முன்னால் பலிதம் ஆகவில்லை. அதை அறிந்த சமணர்கள் ஞானசம்பந்தர் திருமடத்திற்குத் தீ வைத்தனர். ஒருபகுதி தீப்பற்றி எரிந்தது. அடியவர்கள் சமணர்களின் வஞ்சனையை அறிந்து ஞானசம்பந்தரிடம் தெரிவித்தனர். இத்தீ அரசன் முறை செய்யாமையால் நேர்ந்ததாகும், ஆதலால் இத்தீ அவனைச் சென்று பற்றுதலே முறையாயினும் மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணுக்கு ஊறு நேராதவாறு பையச் சென்று பாண்டியனைப் பற்றுவதாகுக என்று கூறி செய்யனே திரு என்று பதிகம் ஓதி தீயை ஏவினார்.

பொழுது விடிந்தது. ஞானசம்பந்தர் திருமடத்தில் சமணர்கள் தீவைத்த செய்தி மதுரை மாநகர் முழுதும் பரவியது. அதனைக் கேள்வியுற்ற மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் மிகவும் மன நடுக்கம் உற்றனர். இக்கொடியோர் வாழும் நாட்டில் ஞானசம்பந்தரை வரவழைத்த குற்றத்துக்கு நாம் இறப்பதே சரியான தண்டனை என்று எண்ணினர். திருமடத்திலிடப்பட்ட தீயால் யாருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாமை கருதி ஆறுதல் உற்றனர். இந்நிலையில் பாண்டி மன்னனை வெப்பு நோய் பற்றி வருத்தியதறிந்து உளம் நடுங்கி மன்னனை அடைந்தார்கள். மருத்துவர்களாலும் சமண முனிவர்களாலும் நோயைக் குணப்படுத்த இயலவில்லை..

இந்நிலையில் குலச்சிறையார் அரசனை அணுகி ஞானசம்பந்தர் திருமடத்துக்குச் சமணர்கள் இட்ட தீயே நோயாகி வந்துள்ளது. அவர் வந்தால் நோய் தீரலாம் என்றார். மன்னன் ஞானசம்பந்தர் என்ற நாம மந்திரத்தைக் கேட்ட அளவில் அயர்வு நீங்கியதை உணர்ந்து அவரை அழைப்பீராக என்று கூறினான். சமணர்கள் அரசனிடம் இந்நோய் ஞானசம்பந்தரால் தீர்க்கப் பெற்றாலும் தங்களாலேயே தணிந்தது எனப் பொய்யுரைக்க வேண்டினர். மன்னன் நடுநிலை பிறழேன் என மறுத்தான். குலச்சிறை யாரும் அரசியாரும் ஞானசம்பந்தரைச் சென்று தரிசித்துத் திருமடத் திற்குத் தீயிட்ட செயலுக்கு மிக வருந்தியவர்களாய் மன்னன் வெப்பு நோயால் வாடுவதை விண்ணப்பித்துத் தாங்கள் எழுந்தருளி நோயைக் குணப்படுத்தினால் உய்வோம் எனக் கூறி நின்றனர். ஞான சம்பந்தர் சமணர்களோடு செய்யும் வாதில் வென்று தென்னர் கோனுக்குத் திருநீறு அணிவிப்போம் எனக் கூறிப் புறப்பட்டுத் திருக் கோயிலை அடைந்து காட்டு மாவது உரித்து என்ற திருப்பதிகத்தால் போற்றி இறைவன் திருவுளக் குறிப்பை அறிந்தார். மேலும் சமணர் மேற்கொள்ளும் வாதங்களிலும் வெற்றி நல்க வேத வேள்வியை என்ற திருப்பதிகம் பாடி இறைவனிடம் விடை பெற்று வெளிவந்து சிவிகையில் ஏறி மன்னனின் மாளிகையை அடைந்தார்.

வெப்பு நோய் தவிர்த்தல்:

ஞானசம்பந்தர் பாண்டியன் அரண்மனையை அடைந்து மன்னன் அருகில் இடப்பெற்ற பொற்றவிசில் எழுந்தருளினார். மன்னன் ஞானசம்பந்தரைத் தரிசித்த அளவில் நோய் சிறிது தணியப் பெற்றவனாய் அவரோடு உரையாடும் முறையில் நுமது ஊர் எது எனக் கேட்கப் பிரமனூர் என்ற திருப்பதிகத்தால் விடையளித்தார். சமணர்கள் அச்சமுற்றார்கள். ஆயினும் அதனை மறைத்துக் கொண்டு சம்பந்தரை நோக்கி உங்கள் சமயக் கொள்கைகளைக் கூறுங்கள் எனக்கூறினர். அரசியார் கொடிய சமணர்கள் நடுவில் இப்பாலகரை நாம் அழைத்தது தவறோ என வருந்திச் சமணர்களை நோக்கி மன்னனின் நோயை முதலில் தணிக்க முயலுங்கள். நோய் தணிந்த பிறகு வாது செய்யலாம் என்றார். ஞானசம்பந்தர் அரசமா தேவியாரைப் பார்த்து அஞ்சற்க; என்னைப் பாலகன் எனக் கருத வேண்டா; ஆலவாயரன் துணைநிற்க வாதில் வெல்வோம் என்றார். சமணர்கள் மன்னன் உடலில் இடப்பாகம் பற்றிய நோயை நாங்கள் குணப்படுத்துகிறோம் என்று பீலி கொண்டு உடலைத் தடவிய அளவில் நோய் மேலும் கூடியது. ஞானசம்பந்தர் மந்திரமாவது நீறு என்ற திருப்பதிகம் பாடி, தம் திருக்கரத்தால் வலப்பாகத்தில் திரு நீற்றைத் தடவிய அளவில் நோய் தணிந்து இடப்பாகத்தே மூண்டெழக் கண்ட மன்னன் அப் பாகத்தையும் தாங்களே தீர்த்தருள வேண்டுமென வேண்டினான். ஞானசம்பந்தர் இடப்பாகத்திலும் திருநீறு பூசிய அளவில் நோய் தணிந்தது. மன்னன் எழுந்து ஞானசம்பந்தரைப் பணிந்து யான் உய்ந்தேன் என்று போற்றினான்.

அனல் வாதம்:

பாண்டியனது வெப்பு நோயைப் போக்க இயலாத சமணர்கள் தருக்க வாதம் புரிவதை விடுத்துத் தீயிலும் நீரிலும் அவரை வெல்லலாம் என்று எண்ணினார்கள். திருஞானசம்பந்தர் இனி உங்கள் வாய்மையைக் கூறுங்கள் என்றார். சமணர்கள் இருதிறத்தாரும் தாங்கள் கண்ட பேருண்மையை ஏட்டில் எழுதி நெருப்பில் இட்டால் வேகாத ஏடு எவருடையதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்வோம் என்றனர். ஞானசம்பந்தரும் அதற்கிசைந்தார். பாண்டியன் தீக்குண்டம் அமைக்கக் கட்டளையிட்டான்.

ஞானசம்பந்தர் தாம் அருளிய திருப்பதிகச் சுவடியைக் கொணரச் செய்து வழிபட்டு அதனை விரித்தருளினார். போகமார்த்த பூண்முலையாள் என்ற திருநள்ளாற்றுத் திருப்பதிகம் உதயமாயிற்று. ஞானசம்பந்தர் நள்ளாற்றிறைவனைப் போற்றி அவ் ஏட்டினை எடுத்து அத்திருப்பதிகம் அனலிடை வேகாதிருக்க வேண்டி தளிரிள வள ரொளி என்றதொரு திருப்பதிகம் அருளி எடுத்த ஏட்டினைத் தீயில் இட்டார். அவ்வேடு தீயில் எரியாது பச்சென்றிருந்தது.சமணர்கள் தங்கள் நூற் பொருள் எழுதப் பெற்றதொரு ஏட்டினைத் தீயில் இட்டனர். அது எரிந்து கரிந்து சாம்பலாயிற்று. ஞானசம்பந்தர் குறித்த நேரம் வரை காத்திருந்து தான் இட்ட ஏட்டை யாவரும் காண எடுத்தருளினார். அது முன்னையினும் பச்சென்றிருந்த காரணத்தால் பச்சைத் திருப்பதிகம் எனப் போற்றப்பெறுவதாயிற்று.

புனல்வாதம்:

சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு மன்னனை நோக்கி ஓர் வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச் செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம் என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு யாது எனக் கேட்டார். சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை இவ் வேந்தன் கழுவேற்றி முறை செய்யலாம் என்றனர். மன்னனும் உடன் பட்டான்.

ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மை யாகக் கூறும் அஸ்தி நாஸ்தி என்ற வசனத்தை எழுதி ஆற்றிலிட்டனர். அம்மொழி ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள் நீவிரும் உமது சமய உண்மையை எழுதி நீரில் இடுக எனக்கூறினர். ஞான சம்பந்தர், திருப்பாசுரம் எனப்படும் வாழ்க அந்தணர் என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்து, அதனை ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டை ஆற்றில் இட்டருளினார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏறிச் சென்றது.

பரமசிவனே எல்லாப்பொருளும் என்று எழுதிய திருவேட்டிலே “வேந்தனு மோங்குக”என்று பாடியருளியபடியால் பாண்டியராஜருடைய கூன் நிமிர்ந்தது. ஏடு எதிர்கொண்டு செல்லும்பொழுது, தேவர்களெல்லாரும் ஸ்தோத்திரஞ்செய்து, புஷ்பமாரி பெய்தார்கள் பாண்டியர் அற்புதங்கொண்டு நின்றார். சமணர்களெல்லாரும் அஞ்சிப் பதைபதைத்துத் தலைகுனிந்து நின்றார்கள். குலச்சிறைநாயனார் அத்திருவேட்டைத் தொடர்ந்து எடுத்தற்கு விரும்பி, காற்றைப்போல அதிவேகத்தோடு செல்கின்ற குதிரைமேல் ஏறிக்கொண்டு, பின் சென்றார். பிள்ளையார் அவ்வேடு தங்கும் பொருட்டு, “வன்னியுமத்தமும்” என்னுந் திருப்பதிகம் பாட குலச்சிறைநாயனார் சிவாலயத்துக்குப் பக்கத்தில் இருக்கின்ற நீர் நடுவிலே புகுந்து, அங்கே தங்கிய ஏட்டை எடுத்துச் சிரமேற் கொண்டு பெருமகிழ்ச்சி பொங்க, கரையில் ஏறி, திருவேடகத்தில் எழுந்தருளியிருக்குங் கடவுளை வணங்கித் துதித்து, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் சந்நிதியில் வந்து அவருடைய திருவடிகளை வணங்கிக்கொண்டு, பாண்டியர் முதலாயின எரெல்லாருக்கும் காட்ட; அடியார்கள் எல்லாரும் ஆனந்தத்துடனே “ஹரஹர” என்று ஆரவாரித்தார்கள். ஏடு
நின்ற கோயில் ஏடகம் எனப் பெற்றது.

பாண்டிய மன்னன் குலச்சிறைநாயனாரை நோக்கி “வாதிலே ஒட்டித் தோற்ற இந்தச் சமணர்கள் முன்னே எங்கள் பரமாசாரியராகிய சுவாமிகளிடத்திலே அநுசிதஞ் செய்தவர்கள். ஆதலால் இவர்களைக் கழுவிலே ஏற்றுக” என்று வேண்டினார். கருணாகரராகிய பிள்ளையார் அதைக் கேட்டும், தாம் அவர்கண்மேல் சிறிதும் பகையிலராயினும், அவர்கள் சிவனடியார்கள் வாழுந்திருமடத்திலே செய்த தீங்கு அதிபாதகமாதலாலும், அதிபாதகஞ்செய்தார் யாவராயினும் அவரைக் கொல்லல் வேண்டுமென்பது சிவாகம நூற்றுணிவாதலாலும், பாண்டியருடைய குற்றமற்ற செய்கையை விலக்காதிருந்தார்

திட பக்தியுடைய குலச்சிறைநாயனார், கழுத்தறிகளை நாட்டுவித்தார் அவைகளில் அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரரும் ஏறினார்கள். பிள்ளையார் பாண்டியராஜருக்கு விபூதி கொடுத்தருள, அவர் அவருடைய ஸ்ரீபாதங்களை விழுந்து நமஸ்கரித்து எழுந்து வாங்கி அணிந்து கொண்டார் பாண்டி நாட்டிலுள்ள அனைவரும் விபூதி அணிந்து கொண்டார்கள். அரசர் சைவ சமயத்தை தழுவியதால் சமணசமயம் பாழாக, சைவசமயமே தழைத்தோங்கிற்று. திருஞானசம்பந்த மூர்த்திநாயனாருடைய திருப்புகழே எங்கும் பரந்தது

தொடர்ச்சி
பகுதி 4

திருச்சிற்றம்பலம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram