fbpx

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 28, 5

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

  1. திருஞானசம்பந்த நாயனார்

பகுதி 5
நிறைவுப் பகுதி

திருமணம்

முறைப்படி வேள்விகள் பல செய்வதற்கு இத்தருணத்தில் திருமண வாழ்க்கையை மேற்கொள்வதுதான் மிக்கச் சிறப்புடையதாகும் என்று செப்பினர்.அவர்கள் மொழிந்தது கேட்டு, உங்கள் முடிவு உலகோரால் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும் என்பதனை நான் மறுப்பதாக இல்லை. இருந்தாலும் தற்போது மண வாழ்க்கையை மேற்கொள்வதை நான் சற்றும் விரும்பவில்லை என்று விடையிறுத்தார்.உலகப்பற்று எனும் பாசத் தொடர்பை விட்டு அகலும் அரும்பெரும் நிலையை இறைவன் திருவருளால் அடைந்துவிட்ட ஞானசம்பந்தர் திருமணம் செய்து கொள்ள இசையவே இல்லை.

ஆனால் சிவபாதவிருதயரும், மறையவர்களும் மறையவர்களுக்குரிய அறத்தை எடுத்துக்கூறி அவரை வைதீக நெறிப்படி ஒழுகுமாறு வற்புறுத்தினர். இறுதியில் ஞானசம்பந்தர் அவர்களது வேண்டுகோளுக்கு ஒருவாறு இசைந்தார். அனைவரும் பெரும் மகிழ்ச்சி பூண்டனர். திருப்பெருண நல்லூரில் வாழும் நம்பியாண்டார் நம்பியின் திருமகளே ஞானசம்பந்தருக்கு மணமகளாக வரத் தகுதியுடையவள் என்பதைத் தீர்மானித்தனர்.

அக்குலமகளையே மணம் முடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர்.கணித மங்கல நூலோர் வகுத்துக் கொடுத்த சிறந்த ஓரையில் திருமண நந்நாள் குறிக்கப்பட்டது. நாளோலை உறவினருக்கும், சுற்றத்தாருக்கும் அனுப்பப்பட்டது. திருமணத்திற்கு ஏழு நாட்கள் முன்பே சுற்றமும், நட்பும் சிவபாதவிருதயர் பெருமனையில் மகிழ்ச்சி பொங்க வந்து கூடினர்.திருஞானசம்பந்தரின் திருமணத்தை விண்ணவர் வியக்குமளவு மிக்கச் சிறப்புடன் நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர்.

எங்கும் விதவிதமான அலங்காரங்கள் செய்தனர். முத்து வளைவுகள் அமைத்து அழகிய மாவிலைத் தோரணங்களும், புத்தம் புது மலரால் கட்டப்பட்ட பூமாலைகளும் தொங்க விட்டனர்.வீதி முழுவதும், ஆலயத்தைச் சுற்றியும் மிகப் பிரம்மாண்டமான அலங்காரப் பந்தல்கள் போடப்பட்டன.முரசங்கள் முழங்க, இசைக் கருவிகள் ஒலிக்கப் பொன்மணிப் பாலிகை மீது புனித முளையை நிறைத்து பாலும் நீரும் கலந்து தெளித்தனர். மாடமாளிகைகளையும், மணிமண்டபங்களையும் எண்ணத்தைக் கவரும் வண்ண ஓவியங்களால் அழகுற அலங்கரித்தனர். வேதியர் குலப் பெண்கள் வாயிற் புறங்களில் அழகுக் கோலமிட்டனர். தீபங்களை ஏற்றினர். பொற்சுண்ணங்களையும், மலர்த் தாதுக்களையும் எங்கும் தூவினர். புண்ணிய புது நீரைப் பொற்குடங்களில் நிறைத்தனர்.

சிவபாதவிருதயர் சீர்காழியிலுள்ள திருத்தொண்டர்களை வரவேற்று வணங்கினார். திருமணத்திற்கு வருகை தந்துள்ளோரை உபசரித்து மனம் மகிழ்ச்சியுற செய்தார். தான தருமங்களைச் செய்து கொண்டேயிருந்தார். எங்கும் மகிழ்ச்சி வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது. திருமணத்திற்கு முதல் நாள் மறையோர்களும், தொண்டர்களும் திருஞான சம்பந்தருக்கு இறைவன் திருவருள் பொருந்திய திருக்காப்பு நாணினைச் செய்து அத்திருக் காப்பு நாணினை நகர்வலம் கொண்டு வந்தனர்.

தேவகீதம் ஒலிக்க மங்கள முழக்கத்துடன் மணமலரும், சாந்தும், பொன் அணிகளும், அழகிய துகிலும் அணியப்பெற்று, புண்ணியத்தின் திருவுருவத்தைப் போல் மலரணையில் எழுந்தருளியிருந்த திருஞானசம்பந்தரின் திருக்கையில் மறைமுமைப்படி வேதியர்கள் திருக்காப்பு நாணினைக் கட்டினர். மறுநாள் திருமணத்தன்று வைகறைப் பொழுது துயிலெழுந்த ஞானசம்பந்தர் திருத்தோணியப்பர் தரிசனத்திற்குப் பிறகு திருமணச் சடங்கினை மேற்கொள்ளலானார்.

சீர்காழிப் பதியிலிருந்து பொன்னொளி பொருந்திய முத்துச் சிவிகையில் அமர்ந்து திருநல்லூர்ப் பெருமணம் என்னும் திருப்பதிக்கு எழுந்தருளலானார்.இயற்கை அருளோடும், இறைவன் அருளோடும்முத்துச் சிவிகைக்கு முன்னும் பின்னும் மங்கள வாத்தியங்களும், தேவ துந்துபிகளும் முழங்கின. சிவயோகிகள் உற்றார் உறவினர் புடைசூழ திருஞானசம்பந்தர், திருசடைபிரானின் சேவடியைத் தமது திருவுள்ளத்தில் சிந்தித்தவாறு திருநல்லூர்ப் பெருமணம் என்னும் தலத்தை அடைந்தார்.திருநல்லூர்ப் பெருமணத்து அடியார்களும், பெண்வீட்டார் பலரும் ஞானசம்பந்தரை எதிர்கொண்டழைக்க எல்லையிலேயே காத்திருந்தனர்.

ஞானசம்பந்தர் முத்துச் சிவிகையில் எல்லையை வந்தடைந்ததும், வீணை ஒலியும் வேத ஒலியும் வாழ்த்தொலிகளும் விண்ணை முட்டின. அடியார்கள் ஞானசம்பந்தரை வரவேற்று திருவீதி வழியாக கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். சிவன் மீது சுந்தரத் தமிழில் பாட்டிசைத்துப் பணிந்து மனம் குளிர்ந்த ஞானசம்பந்தர் பரமன் அருள் பெற்றுப் புறப்பட்டார். கோயிலின் புறத்தே உள்ள மடத்தில் ஞானசம்பந்தர் எழுந்தருளினார். ஞானசம்பந்தரைத் திருமண கோலத்திலே அணிபுனையத் தொடங்கினார். அத்தொழிலில் தேர்ச்சி பெற்ற முதிய அந்தணர்கள் அவரைப் பொற்பீடத்தில் அமரச் செய்து, தூய திருமஞ்சன நீரை எண்ணற்ற பொற்குடத்தில் கொண்டு வந்து திருநீராட்டினர்.வெண்பட்டாடையினை அணிவித்தனர். நறுமண மிக்க சந்தனக் கலவையை அவரது திருமேனியில் பூசினர். திருவடிகளிலே முத்துக் கோவைகளையுடைய இரத்தின வளையினைப் புனைந்தனர்.முத்து மாலைகளைக் கொத்தாகத் திரட்டிய அணி வடத்தினை மணிக்கட்டிலே அழகுறப் புனைந்தார்கள். பொற்கயிற்றிலே பரு முத்துக்களைக் கோர்த்துத் திருவரையில் அரைஞாணாக விளங்கச் செய்தனர்.முத்து வடங்களாலாகிய அரைப்பட்டையின் மேல் வீரசங்கிலியினைப் புனைந்தனர். முத்துக் கோரையாலாகிய பூணூலினை முறைப்படி மந்திரம், வேதம் ஓதி மாற்றி அணிவித்தனர்.கழுத்திலே முத்துமாலை, விரல்களிலே வயிரமணி மோதிரம், கையிலே முத்துத்தண்டையும், கைவளையும், முழங்கையிலே, மணிவடங்கள், தோளிலே முத்துமணி ஆபரணங்கள், கழுத்திலே உருத்திரச் சண்டிகையும் முத்துவடமும், காதுகளிலே மகரக் குண்டலமும் ,சிரசிலே முத்து வடமும், இவரது வைரமிழைத்த பொன்னாற் மேனிதனிலே நவரத்தின மணிகளாலும், தெய்வத்தன்மை பிரகாசிக்கத் திருமண அலங்காரத்தை ஒளியுறச் செய்தனர்.

அலங்கார வைபவம் முடிந்ததும் ஞானசம்பந்தர் உருத்திராட்ச மாலையினை எடுத்து நமச்சிவாய என்ற திருநாமத்தை மனதிலே தியானித்தவாறு தொழுது தாமே கழுத்தில் அணிந்து கொண்டார்.ஞானசம்பந்தர் கோடி சூரிய பிரகாச ஒளியுடன், அன்பர்களும், அடியார்களும், <உறவினர்களும் சூழ்ந்துவர, திருமணம் நடக்க இருக்கும் நம்பியாண்டார் நம்பியின் பெருமனைக்குள் எழுந்தருளினார்.பந்தலிலே போடப்பட்டிருந்த முத்துக்குடை நிழலின் கீழ் பொற்பலகையில் அமர்ந்தார்.சங்கநாதங்களும், சுந்தர கீதங்களும், மங்கல இசைக் கருவிகளும் ஒலித்த வண்ணமாகவே இருந்தன. வாழ்த்தொலிகளும், வேத முழக்கங்களும் இடையறாது ஒலித்துக் கொண்டேயிருந்தன.

இதே சமயத்தில் நம்பியாண்டார் நம்பியின் அருந்தவப்புதல்விக்குக் காப்பு கட்டிச் சங்கற்பம் முதலிய வேதச் சடங்குகளைச் செய்தனர்.அப்பவளக் கொடி பெண்ணுக்கு வைரத்தாலும், நவமணிகளினாலும் செய்யப்பட்ட பசும் பொன் ஆபரணங்களை வரிசையாகச் சூட்டி அலங்காரப் பொன் விளக்கு போல் பொலிவு பெறச் செய்தனர்.அந்தணர் குலக் குழந்தைகள், ஓங்கி எழுந்த ஓமப்புகையில், வாசனைத் தூளை வீசினர். வேதியர்கள், பொற் கலசத்திலிருந்து நன்னீரையும், அரசிலையும், தருப்பையும் கொண்டு தெளித்தார்கள்.அழகு மகளிர் நறுமலர்களைத் தூவினர். குறித்த நேரத்தில் சிவக்கொழுந்தும், அக்கொழுந்தின் கரம்பற்றப் போகும் பொற்கொடி போன்ற நற்குண நங்கையும் ஆதிபூமி என்னும் மணவறையின் உள்ளே அமர்ந்தருளினார்.

நம்பியாண்டார் நம்பி ஞானசம்பந்தருடைய கரத்தில் மங்கள நீரினை மும்முறை வார்த்துத் தமது மகளைத் தாரை வார்த்துக் கொடுத்தார்.ஞானசம்பந்தர், மங்கை நல்லாளின் கரம் பற்றி ஓமத்தைச் சுற்றி வலம் வந்தார்.அபபொழுது அவரது திருவுள்ளத்திலே, எனக்கு ஏன் இந்த இல்லற வாழ்க்கை வந்தமைந்தது? சிற்றின்பத்தில் உழலு<வதைவிட, இவளுடன் எம்பெருமானின் திருவடி நீழலை அடைந்தே தீருவது என்று பேரின்ப ஆசை அமிர்தம் போல் சுரந்தது. அத்தகைய மெய்ஞ்ஞான எண்ணத்தோடு, ஞான சம்பந்தர் மனைவியோடும், மற்றவரோடும், உற்றார் உறவினர்களோடும் திருமணப் பெருங்கோயிலை வந்தடைந்தார்.

சிவனடியார் மலரடியை மனதிலே நிறுத்தி, தன்னை அவரது சேவடியில் சேர்த்துக் கொண்டருள வேண்டும் என்ற கருத்துடன், நல்லூர்ப் பெருமணம் என்று தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடி அருளினார். அப்பொழுது விண்வழியே அசரீரியாக எம்பெருமான், நீயும், உன் மனைவியும், உன் புண்ணிய திருமணத்தைக் காண வந்தவர்களும், எம்மிடம் சோதியினுள்ளாகக் கலந்தடையுங்கள் என்று திருவாய் மலர்ந்து அருள் செய்தார்.எம்பெருமான் மூன்று உலகங்களும் தம் ஒளியால் விளங்கும் வண்ணம் சோதிலிங்கமாக காட்சி அளித்தார். அப்பேரொளி திருக்கோயிலையும் தன்னகத்தே கொண்டு மேலோங்கி ஒளிமயமாக ஓங்கி நின்றது. அச்சோதியிலே ஓர் வாயிலையும் காட்டியருளினார்.அன்பும், அறமும், அருளும், திருவும் உருவாகக் கொண்ட உமையாளின் திருமுலைப் பாலுண்ட புண்ணியத்தின் திரு அவதாரமாகிய திருஞானசம்பந்தப் பெருந்தகையார் – சைவத்தை வளர்த்து, செந்தமிழ்ப் பதிகம் பல பாடிய தென்னகத்துத் தெய்வப் புதல்வன் சிவபரஞ் சுடராகிய மனநல்லூர்ப் பெருமானைத் தொழுது போற்றினார்.தண் தமிழால் பாடிப் பரவசமுற்றார். தேன் தமிழால் அபிஷேகம் செய்தார். பக்தி வெள்ளத்தில் மூழ்கினார்.உலகம் உய்ய, சிவஞான நெறியினை எல்லார்க்கும் அளிக்க வல்லது நமச்சிவாய என்னும் திருவைந் தெழுத்துப் பெருமந்திரமாகும் என்று திருவாய் மலர்ந்தருளினார்.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகத்தினை, விண்ண வரும், மண்ணவரும் கேட்கும் வண்ணம் பாடினார் சம்பந்தர்.திருஞான சம்பந்தர் அனைவரையும் நோக்கி, பிறவித் துயரம் தீர யாவரும் இப்பேரொளியிலே புகுவீர்களாக என்று கேட்டுக் கொண்டார். சிவாய நம; சிவாய நம என்ற வேத மந்திரத்தினை விண்ணை முட்டும் வண்ணம் பெருமழை போல் கோஷித்து வாழ்த்தினர். எல்லையில்லாத பிறவி என்னும் வெள்ளத்திலே மூழ்கித் தத்தளித்துக்கொண்டு, காற்றடைத்த பையாகிய காயத்திலே அடைபட்டு, உய்ய உணர்வின்றி மயங்கும் மக்களுக்கு பேரின்ப வழிகாட்டிய திருஞான சம்பந்தரின் திருவடியைத் தொழுது, நமச்சிவாய மந்திரத்தை மனதிலே தியானித்த வண்ணம் மக்கள் யாவரும் சோதியினுள்ளே புகுந்தனர்.

திருநீலநக்க நாயனார், திருமுருக நாயனார், திருநீல கண்ட யாழ்ப்பாண நாயனார், சிவபாத விருதயர், நம்பியாண்டார் நம்பி ஆகிய சிவனருட் செல்வர்கள் தம் இல்லறத்தாருடன் பேரொளியில் புகுந்தனர். ஏனையவர்களும், திருமணத்திற்கு வந்தணைந்தவர்களும், திருமணத்திற்கு பணிகள் செய்தோரும் தத்தம் மனையார்களோடு பேரொளியில் புகுந்தார்கள்.அருந்தவசிகளும், மறைமுனிகளும், ஆலயம் தொழ வந்த சால்புடை மக்களும் சோதியினுள் கலந்தனர். பேரின்ப வீட்டிற்குப் பெருவழிகாட்டிய ஞான சம்பந்தப் பெருமான் தம் மனைவியாரின் கையைப் பிடித்தவாறே அச்சோதியினை வலம் வந்தார். நமச்சிவாய என்ற நாமத்தை முழக்கியவாறு, சோதியினுள் புகுந்தார்.அதன் பின்பு அப்பேரொளியில் காணப்பட்ட வாயிலும் மூடிக்கொண்டது.தேவர்களும், முனிவர்களும், சிவகணத்தவர்களும் சிந்தை மகிழ்ந்து போற்றித் துதித்தனர்.

கொன்றை மாலையை அணிந்த செஞ்சடை வண்ணர், உமாதேவியாருடன் விடைமேல் தோன்றி அருளினார்.பேரொளி புகுந்த சிவனருட் செல்வர்களைத் தமது திருவடி நீழலை அடைந்து திருப்பணி புரியும் திருப்பேற்றை அளித்தார்.வேதங்களையும், ஏழுலகங்களையும் ஈன்று கருணை வடிவமாக நின்ற உமாதேவியாரின் திருமுலைப் பாலினைச் சிவஞான அமுதத்தோடு உண்டு, அருள்பெற்று, சைவத்தை உயர்வித்த அருந்தவச் செல்வன் திருஞான சம்பந்தப் பெருமானையும் அவர் தம் மனைவியாரையும் எம்பெருமான் தமது அருகிலேயே அணைந்து வாழும் நிகரில்லாப் பெருவாழ்வை அளித்தருளினார்.

அரிய தமிழுக்கு இருப்பிடமான தழிழாகரர் சரிதத்தை அடியேனுக்கு அவரது திருவடிகள் அறிவித்துத் தந்தருளிய பண்பின் அளவு அறிந்தபடி துதி செய்தேன்.தாரணி மேல்
பெரிய கொடையும்
உறுதியான வன்மையும்
பேருணர்வும் திருத்தொண்டு செய்து பெற்ற பண்புடைய ஏயர்கோன் கலிகாம நாயனார் செய்த திருத்தொண்டைத்
துதித்துச் சொல்வேன்.

( திருஞானசம்பந்த நாயனார் புராணம் முற்றிற்று )

காலம்:

திருஞானசம்பந்தர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி யில் தமிழகத்தே வாழ்ந்த திருவருட்செல்வராவார் என்பது வரலாற்று ஆசிரியர்கள் ஒப்ப முடிந்த உண்மையாகும்.
திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சம காலத்தவர் என்பது அவர் தம் வரலாறுகளால் நன்கினிது விளங்கும்.

திருநாவுக்கரசர் காலத்தில் குணபரன் என்ற சிறப்புப் பெயரோடு வாழ்ந்த பல்லவன் மகேந்திர வர்மன் ஆவான். இவன் காலம் கி.பி. 600 முதல் 630 வரை ஆகும். திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார் களில் சிறுத் தொண்டர் என்னும் பரஞ்சோதியார் மகேந்திரவர்மனின் புதல்வனான நரசிம்ம வர்மப் பல்லவன் காலத்தில் படைத்தளபதி யாயிருந்து சாளுக்கியரோடு வாதாபியில் நிகழ்த்திய போரில் வெற்றி கண்டவர்.

அதன் பின்னரே அவர் திருச்செங்காட்டங்குடி சென்று சிவனடித் தொண்டு பூண்டு அடியவராக விளங்கினார். நரசிம்மவர்மன் வாதாபிப் போர் நிகழ்த்திய காலம் கி.பி. 642 ஆகும்.

திருஞானசம்பந்தரால் வெப்புநோய் தவிர்த்தருளப் பெற்ற பாண்டிய மன்னன் நெடுமாறன் மாறவர்மன் அரிகேசரி என்ற பெயருடையவன். மங்கையர்க்கரசியாரின் மணாளனாக விளங்கிய இம்மன்னன் காலம் கி.பி. 640 – 670. இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு எண்ணுங் கால் திருஞானசம்பந்தரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியேயாகும் என்பதை ஐயம் இன்றித் துணியலாம்.

பெயர்: திருஞானசம்பந்தர்
குலம்: வேதியர்
பூசை நாள்: வைகாசி மூலம்
அவதாரத் தலம்: சீர்காழி
முக்தித் தலம்: திருநல்லூர் பெருமணம்

திருநல்லூர் ஆலயம் தற்போது ஆச்சாள்புரம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் சீர்காழி அருகில் உள்ளது

மேற்கோள்கள்
(சுந்தரமூர்த்தி நாயனார் தனது திருத்தொண்டத் தொகையின் ஐந்தாவது பாடலில் சம்பந்தரை பின்வருமாறு வரிசைப்படுத்தி உள்ளார்

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்தல் கொன்றையான் அடியலால் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்

2.சேக்கிழார் பெரிய புராணத்தில் வம்பறா வரிவண்டுச் சருக்கத்தின் பாடல் எண் 1899 முதல் 3154 திருஞானசம்பந்தரை பாடியுள்ளார்

திருச்சிற்றம்பலம்
சிவார்ப்பணம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram