fbpx

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 31

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

  1. தண்டியடிகள் நாயனார் பிறந்தாலே முக்தி என்று சொல்லப்படும் சோழ நாட்டிலே தலைசிறந்து விளங்கும் திருவாரூர் என்னும் தலத்தில் தண்யடிகள் என்னும் சிவனருட் செல்வர் வாழ்ந்து வந்தார். இவர் பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர். புறக்கண் அற்ற இத்தொண்டர் அகக் கண்களால் திருவாரூர்த் தியாகேசப் பெருமானின் திருத்தாளினைக் கண்டு எந்நேரமும் இடையறாமல் வணங்கி வழிபட்டு வந்தார். இவர் காலத்தில் திருவாரூரில் சமணர்கள் ஆதிக்கம் சற்று பரவியிருந்தது. அதனால் சமணர்கள் சைவத் தொண்டர்களுக்குப் பற்பல வழிகளில் இன்னல்களை விளைவித்தனர். தண்டியடிகள் நீராடும் கமலாலய திருக்குளத்திற்கு பக்கத்தில் சமணர்கள் பல மடங்களைக் கட்டிக்கொண்டு தங்கள் மதப் பிரசாரத்தை நடத்தி வரலாயினர். சமணர்கள் குலத்தை மண் கொண்டு மூடிவிடுவார்களோ என்று வேதனைப்பட்டு குளத்தின் பரப்பையும், ஆழத்தையும் பெரிதுபடுத்தி தம்மால் இயன்றளவு திருப்பணியைச் செய்ய எண்ணினார் அடிகளார். கண்ணற்ற அடிகளார் இறைவனின் அருளால் குளத்தின் நடுவிலும், குளத்தைச் சுற்றிலும் அடையாள முளைகள் நட்டுக் கயிறும் கட்டினார். மண்ணை வெட்டி வெட்டி கூடையில் எடுத்துக் கொண்டு கயிற்றை அடையாளமாகப் பிடித்துக்கொண்டு வந்து கொட்டுவார். நாயனாரின் நல்லெண்ணத்தைப் புரிந்துகொள்ள சக்தியற்ற சமணர்கள் அவருக்கு இடையூறுகள் பல விளைவிக்கத் தொடங்கினர். சமணர்கள் நாயனாரை அணுகி இவ்வாறு நீங்கள் மண்ணைத் தோண்டுவதால் இக்குளத்திலுள்ள சிறு ஜீவராசிகள் எல்லாம் இறந்துபோக நேரிடும். உமது செயல் அறத்திற்குப் புறம்பானது என்றனர்.

அவர்கள் பேச்சைக் கேட்டு தமக்குள் சிரித்துக் கொண்ட தண்டியடிகள், கல்லிலுள்ள தேரைக்கும், கருப்பை உயிருக்கும் நல்லுணர்வு தந்து காக்கும் ஈசனுக்கு, இந்த ஜீவராசிகளை எப்படிக் காக்க வேண்டும் என்பது தெரியும். திருசடையானுக்கு நான் செய்யும் இப்பணியால் சிறு ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல; உங்களுக்கும் எவ்வித தீங்கும் நேராது என்றார். சமணர்கள், உம்மைக் குருடன் என்றுதான் எண்ணினோம். காது மந்தம் போல் இருக்கிறது! இல்லாவிட்டால் நாங்கள் உயிர்கள் இறக்கும் என்று சொல்லி எடுத்து விளக்கும் உண்மையை புரிந்துகொள்ள முடியாமல் போகுமா என்ன? என்று சொல்லிக் கேலியாகச் சிரித்தனர்.

திரிபுரத்தை எரித்த விரிசடைக் கடவுளின் திருவடியைப் போற்றித் தினமும் நான் அகக் கண்களால் கண்டு களிக்கிறேன். அவனது திருநாமத்தை நாவால் சொல்கிறேன். ஆலயத்தில் ஒலிக்கின்ற வேத முழக்கத்தை காதால் கேட்கிறேன். ஒப்பில்லா அப்பனின் அருளையும், அன்பையும் ஐம்பொறிகளாலும் அனுபவித்து ஆனந்திக்கிறேன். நீங்கள்தான் கண்ணிருந்தும் குருடர்கள் காதிருந்தும் செவிடர்கள் நாவிருந்தும் ஊமைகள், என்றார் அடிகள். சமணர்கள் எள்ளி நகையாடினர்.

தண்டியடிகளுக்கு வெறுப்பும் கோபமும் ஏற்பட்டது. அவர் அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, அது போகட்டும். எனக்கொரு ஐயம்! நான் எம்பெருமானுடைய திருவருளினால் கண் ஒளி பெற்று நீங்கள் அனைவரும் ஒளி இழந்தீர்களானால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார். அங்ஙனம், நீர் கண் பெற்று நாங்கள் கண்ணை இழக்க நேர்ந்தால் நாங்கள் இந்த ஊரிலேயே இருக்கமாட்டோம். ஊரைவிட்டே ஓடிவிடுகிறோம் என்று ஆத்திரம் மேலிடக் கூறினர்! சமணர்கள் சினம் பொங்க அவரது கரத்திலிருந்த மண்வெட்டியையும், கூடையையும், முளைகளையும் பிடுங்கி எறிந்தனர். கயிற்றினை அறுத்து எறிந்தனர்.

சமணர்களின் இத்தகைய தீச் செயல்களால் மனம் நொந்துபோன தண்டியடிகள் கவலையோடு எம்பெருமானிடம் தமது துயரத்தைப் போக்க அருள் புரியுமாறு பிரார்த்தித்தவாறு துயின்றார். அன்றிரவு இறைவன் நாயனாரின் கனவிலே எழுந்தருளி, அன்பனே அஞ்சற்க! மனம் கலங்காதே! யாம் உம்மைக் காப்போம்! உம்மைப் பழித்தது எம்மை பழித்தது போலவே! எமக்கு நீவிர் செய்யும் திருத்தொண்டு இடையறாது நடக்க உமது கண்களுக்கு ஒளி தந்து சமணர்களை ஒளி இழக்கச் செய்வோம் என்று திருவாய் மலர்ந்தார். இறைவன், அரசர் கனவிலும் காட்சி அளித்து – மன்னா ! எமது திருத்தொண்டன் குளத்திலே திருப்பணி செய்கிறான். நீ அவனிடத்திலே சென்று அவனது கருத்தை நிறைவேற்றுவாயாக! அவனது நல்ல திருப்பணிக்கு சதா இடையூறுகளைச் செய்யும் சமணர்களைக் கண்டித்து என் அன்பனுக்கு நியாயம் வழங்குவாய் என்று பணித்தார்.

பொழுது புலர்ந்ததும் சோழவேந்தன் எம்பெருமானின் கட்டளையை நிறைவேற்றப் புறப்பட்டான். மன்னன் திருக்குளம் வந்தான். தண்டியடிகள் தட்டு தடுமாறிக் கொண்டு திருக்குளத் திருப்பணி செய்வதைக் கண்டான். மன்னன் அடிகளாரை வணங்கினான். கனவில் செஞ்சடையான் மொழிந்ததைக் கூறினான். தண்டியடிகளும், சமணர்கள் தமக்கு அளித்த இடையூறுகளை ஒன்றுவிடாமல் மன்னனிடம் எடுத்து விளக்கி நியாயம் வேண்டினார்.

மன்னன் சமணர்களை அழைத்து வரக் கட்டளையிட்டான். சமணர்களும் வந்தனர். மன்னனிடம் சமணர்கள் தண்டியடிகளிடம் தாங்கள் சவால்விட்டு சினத்துடன் செப்பியதைப் பற்றிக் கூறினர். தண்டியடிகள் ஒளி பெற்றால், நாங்கள் ஊரை விட்டு ஓடுவது உறுதி என்று சமணர்கள் கூறியதைக் கேட்ட மன்னன் அடிகளாரையும், சமணர்களையும் தமது அமைச்சர்களையும், அவை ஆலோசகர்களையும் கலந்து ஓர் முடிவிற்கு வந்தான். மன்னன், தவநெறிமிக்க தண்டியடிகளை பார்த்து, அருந்தவத்தீர்! நீர் எம்மிடம் மொழிந்ததுபோல் எம்பெருமான் திருவருளினால் கண்பார்வை பெற்று காட்டுவீராகுக! என்று பயபக்தியுடன் கேட்டான்.

நாயனார் திருக்குளத்தில் இறங்கினார். மண்ணுற வீழ்ந்து கண்ணுதற் கடவுளை உள்ளக் கண்களால் கண்டு துதித்தார். ஐயனே! நான் தங்களுக்கு அடிமை என்பதை உலகறியச் செய்ய எனக்கு கண் ஒளி தந்து அருள்காட்டும் என்று பிரார்த்தித்தார். ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியவாறு, கையிரண்டையும் தலைமீது கூப்பியவாறு நீரில் மூழ்கினார் அடிகளார். இறைவன் திருவருளால் நீரிடை மூழ்கிய நாயனார் கண் ஒளி பெற்று எழுந்தார். தண்டியடிகள் கண் பெற்றதும் புளகாங்கிதம் மேலிட பூங்கோயில் திருக்கோபுரத்தைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். கரம் தூக்கித் தொழுதார். அரசனை வணங்கினார். மன்னன் கரங்குவித்து சிரம் தாழ்த்தி நாயனாரை வணங்கினான்.

அதே சமயத்தில், சமணர்கள் கண் ஒளியை இழந்தனர். அனைவரும் குருடர்களாக நின்று தவித்தனர். நீதி வழுவாமல் ஆட்சிபுரியும் அரசன் அவர்களை நோக்கி, நீங்கள் கூறியபடி ஒருவர்கூட திருவாரூரில் இல்லாமல் அனைவரும் ஓடிப் போய்விடுங்கள் என்றார். அமைச்சர்களிடம், சமணர்களைத் துரத்த ஏற்பாடு செய்யுங்கள் என்றும் கட்டளையிட்டார். தண்டியடிகள் குளத்தைப் பார்த்து மகிழ்ந்தவாறு பூங்கோயிலை அடைந்து எம்பெருமானைக் கண்குளிர – மனம் குளிர கண்டு களித்துப் பேரின்பக் கூத்தாடினார். தண்டியடிகள் தாம் செய்து கொண்டிருந்த திருப்பணியைத் தொடர்ந்து செய்யத் தொடங்கினார். அரசன் அவருக்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்து கௌரவித்தான். அரனார் புரிந்த அருளில் தண்டியடிகள் தாம் எண்ணியபடியே திருக்குளத்தை மிகமிகப் பெரிதாகக் கட்டி முடித்தார். அடிகளாரின் அறப்பணியை அரசரும் மக்களும் கொண்டாடி பெருமிதம் பூண்டனர். நாயனார் நெடுநாள் பூவுலகில் பக்தியுடன் வாழ்ந்து நீடுபுகழ் பெற்று திருசடையான் திருவடி நிழலை அடைந்து பேரின்ப நிலையை எய்தினார்.

கண்ணின் மணிகளாய ஒளியின்றிக் கயிற்றைத் தடவிக் கொண்டே ஏறியும் இழிந்தும் பொருந்திய திருத்தொண்டாற்றிய தண்டியடிகளின் திருவடிகளை வணங்கித் துன்பங்கள் பலவும் நீங்கப்பெற்று, வானில் வாழும் தேவர்கள் வேண்ட முப்புரங்களையும் எரித்த பெருமான் விரும்பி உறையும் திருவேற்காட்டில் வாழும் நிலவிய புகழுடைய தொண்டர் மூர்க்க நாயனாரது செயலினை இனி எடுத்து மொழிவாம். தண்டியடிகள் நாயனார் புராணம் முற்றிற்று.

பெயர்:
தண்டியடிகள் நாயனார்
குலம்:
செங்குந்தர்
பூசை நாள்:
பங்குனி சதயம்
அவதாரத் தலம்:
ஆரூர்
முக்தித் தலம்:
ஆரூர்

மேற்கோள்கள்

  1. திரு சுந்தரமூர்த்தி நாயனார் தனது திருத்தொண்டத் தொகையில் ஐந்தாவது பாடலில் பின்வருமாறு வரிசைப்படுத்தி உள்ளார்

நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்

  1. சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் அறிமுக உரையோடு சேர்த்து பாடல் எண் 3592 முதல் 3617 வரை 25 பாடல்கள் பாடியுள்ளார்

திருச்சிற்றம்பலம்
சிவார்ப்பணம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram