தாருகாவனத்து முனிவர்கள் யாகங்களில் அதீதமாக ஈடுபட்டிருந்த காரணத்தினால் மெதுமெதுவே ‘யாகங்களே பலன்கள் யாவையும் தரவல்லது, இறைவன் என்றொருவரை தனியே வணங்கத் தேவையில்லை’ எனும் விபரீத முடிவிற்கு வருகின்றனர், மற்றொரு புறம் ரிஷி பத்தினிகளும் ‘கற்பு நலனை பேணியிருத்தலே போதுமானது’ என்று இறை ஆராதனத்தை முற்றிலும் துறந்து விடுகின்றனர்.
*
முக்கண் முதல்வர் இவர்களின் அறியாமையைப் போக்கி அருள் புரியத் திருவுள்ளம் பற்றுகின்றார். பாற்கடல் வாசனாரான மகாவிஷ்ணுவை மோகினி வடிவில் யாகசாலைக்கு அனுப்புவித்து, அதி ஆச்சரியமான பிட்சாடனர் திருக்கோலம் தரித்து முனி பத்தினிகளின் இல்லம் நாடிச் செல்கின்றார்.
*
மோகினி வடிவினரான பரந்தாமன் யாக சாலையில் தோன்றி வீணையில் இனிய இசையினை மீட்டுகின்றார், யாகத்தில் ஈடுபட்டிருந்த முனிவர்கள் ‘இப்படி ஒரு அழகியா?’ என்று தன்னிலை மறந்து மோகினியை நாடிச் செல்கின்றனர், மோகினியோ நிற்பதும், மோகத் தீயைத் தூண்டுவிக்கும் புன்சிரிப்புடன் மெதுமெதுவே நடப்பதுமாய் இருக்க, முனிவர்கள் யாகத்தை முற்றிலும் மறந்தவர்களாய் மோகினியின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கித் தளர்வுற்று அவளைத் தொடர்கின்றனர்.
*
மற்றொரு புறம் ஒளி பொருந்திய சௌந்தரராய் தங்கள் இல்லம் நாடி வரும் பிஷாடனரின் திகம்பரத் திருக்கோலத்தில் தன்னிலை இழக்கும் முனிபத்தினிகள் கற்பு நிலை பிறழ்ந்துப் பெருவேட்கையுடன் ‘எங்களுடன் சிறிதேனும் உரையாட மாட்டாயா?’ என்று ஏங்கிக் கேட்டவாறும், பிட்சாடனரின் திருமேனி அவயவங்கள் ஒவ்வொன்றினைப் பலவாறு புகழ்ந்தவாரும், ‘எங்கள் விரகம் தீர இதமான பாடல்களைப் பாட மாட்டாயா? என்று கெஞ்சியவாறும் பின்தொடர்ந்து செல்கின்றனர்.
மோகினியைத் தொடர்ந்து கொண்டிருந்த முனிவர்கள் சிறிது தூரத்தில் திகம்பர சன்யாசியொருவருடன் காதல் மொழிகள் பேசிய வண்ணமிருக்கும் தங்களின் பத்தினிகளைக் கண்டு வெகுண்டு பிட்சாடனருக்குப் பற்பல சாபமிடுகின்றனர். அவையெதுவுமே சன்யாசியைத் தீண்டவில்லை; இத்தனை காலமாய் தங்களின் யாக வலிமையில் ஆணவமுற்றிருந்த முனிவர்கள் பெரிதும் அதிர்ச்சியுற்று ‘அடே பாதகா! ஆண்கள் இல்லா சமயத்தில் இல்லத்தரசிகளின் இச்சையைத் தூண்டும் நீ யார்?’ என்று பலவாறு தூற்றுகின்றனர்.
*
‘சுவாமியோ புன்சிரிப்புடன்! நானும் என் மனைவியான இந்த மோகினியும் இவ்வனத்தில் தவமியற்றவே வந்தோம், பிக்ஷை பெற வந்த எம்மிடம் கற்பு நிலை முற்றிலும் தவறி ஆசைமொழி பேசியவர்கள் உங்கள் மனைவிகளே, அதிருக்கட்டும் உங்கள் யோக்யதை என்ன? யாக சாலையை மறந்து என் மனைவியுடன் காதல் மொழி பேசியுழலும் நீங்கள் உத்தமர்களோ? என்று பரிகசித்தவாறு அவ்விடம் விட்டு மோகினியுடன் செல்கின்றார்.
*
அவமானமுற்ற தாருகாவன முனிவர்கள் அபிச்சார வேள்வி வளர்த்து பிட்சாடன மூர்த்தியின் மீது ‘புலி; பாம்பு; யானை; சூலம்; மான்; பூதப்படை; நெருப்பு’ என்று பலவற்றை ஏவ, தில்லைப் பரம்பொருளோ அவைகளை தம்முடைய அணி; ஆபரணங்களாக ஏற்று விளங்குகின்றார். பின்னர் நான்முகக் கடவுளின் வழிகாட்டுதலின் பேரில், தங்களின் சிவ அபவாதம் நீங்கும் பொருட்டு, ஒரு வருடம் நியமத்துடன் சிவவழிபாடு புரிந்து நடராஜ மூர்த்தியின் திருவருளைப் பெற்று மகிழ்கின்றனர் என்று சிவபுராணம்; லிங்க புராணம் ஆகியவை விரித்துப் பேசுகின்றன.